Posts filed under 'தமிழ் திரைப்படங்கள்'

வெண்ணிலா கபடி குழு

சொல்ல்வா வேண்டாமா ? ஏற்கனவே பல பேர் சொல்லிருப்பாங்க நாமும் சொல்லனுமா ? தேவையா ?  இப்படி எல்லாம் யோசிச்சேன். சரி கடைசியா ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு படம் பார்க்குறோம் எதுக்கு அத பத்தி சொல்லாம இருக்கனும் நினைச்சு சொல்றேன்.  சில காலமாகவே படம் எதுவும் பார்க்கவில்லை. அபியும் நானும், பூ என ஏகப்பட்ட படங்கள் விட்டு போனதில் வருத்தம். ஹோலிக்காக மார்ச் 11, புதன்கிழமை கம்பெனி லீவ், அதுவும் எங்க கம்பெனி மட்டும் லீவு. சரி வெண்ணிலா கபடி குழு படத்துக்கு போவோம் என முடிவு செய்தோம். புதன்கிழமை தியேட்டரில் எங்களையும் ஒரு பத்து ஜோடிகளையும் தவிர கூட்டம் இல்லை. படம் பார்க்க சென்றவர்கள் நாங்கள் மூவர் மட்டும் என்று தான் நினைக்கிறேன். படத்தில் பெயர் போடும் போது பார்த்தால், அறிமுகம் என்றே ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தனர். ஆனால் படம் நன்றாக தான் இருந்தது, ரொம்ப நல்லாவே இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் படம் குதூகலமாக சென்றது. படம்போன வேகமே தெரியவில்லை. வசனங்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் நடிப்பு நன்றாக தான் இருந்தது. சரண்யா மோகன் மிக குறைந்த நேரமே வந்தாலும் நினைவில் நிற்கிறார். சென்னை 28 மாதிரியே கதை இருக்கிறதோ என்று ஒரு டவுட் வருகிறது. கடைசியில் படத்தில் ஒரு ட்விஸ்ட். அங்க கொண்டு போய் எதுக்கு அந்த டுவிஸ்டுனு இயக்குனருக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் படம் சூப்பர், பார்க்கலேனா பாருங்க.

2 comments மார்ச் 24, 2009

நான் கடவுள் – விமர்சனம்

காலை ஆறு மணிக்கு நான்கு அலாரங்கள் அடிக்க, அவசர அவசரமாக கிளம்பி காலையில் வயிற்றுக்கு எதுவும் உண்ணக் கொடுக்காமல், ஓடி சென்று தியேட்டரில் உட்கார்ந்தோம். அன்று பரீட்சைக்கு காட்டும் அக்கறையை விட இன்று படத்துக்குக் காட்டும் அக்கறைத்தான் அ திகம். படத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள். சில இடங்களில் கொஞ்சம் கொடுரமாக இருக்கும் என்று தான் எண்ணினோம். ஆனால் படம் முழுதுமே அப்படி தான் இருந்தது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியதே கதை. அகோரி சாமி வேடத்தில் வரும் ஆர்யா வருவது சில நேரம் தான். மற்ற நேரங்களில் பூஜாவும் அவளோடு வில்லன்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் மக்களும் தான் வருகின்றனர். அவ்ர்கள் நடிப்பும் புகழும்படியாகவே இருந்தது. பூஜா மற்றும் அவர்களது நடிப்பை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும். பூஜாவுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஆர்யா வருவதோ சில காட்சிகள் தான் என இருக்க அவர் எதற்கு மூன்று ஆண்டுகள் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர். பாலா மிக மிக  தத்ரூபமாக எடுக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டதாக தோன்றுகிறது. சில இடங்களில் நம்மை நெகிழ வைப்பதற்கு பதிலாக் நெளிய வைக்கிறது. கடைசி காட்சியில் பூஜாவின் நடிப்பு அபாரம், ஆர்யாவின் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது, பாலாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆனால் படத்தில் ஒரு முழுமை இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் எனக்கு படம் பிடிக்கவில்லை.

2 comments பெப்ரவரி 10, 2009

கஜினி – गजनी

காலையில் 6.45 இரண்டு அலாரம் வைத்து எழுந்து, கிளம்பி பஸ் பிடிச்சு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் அண்ணனை எழுப்பிவிட்டுட்டு, பத்து மணிக்கு தியேட்டர் வாசலில் சென்று நின்றோம் நானும் முசியும். எங்களுக்கே கொஞ்சம் சிரிப்பாக தான் இருந்தது, புரியாத மொழி படத்தை பார்பதற்கு என்ன ஆர்வம் என்று எண்ணி சிரித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களுக்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்பொழுது எப்படி இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். நான் 22 வருடமாக தியேட்டருக்கு சென்று பார்த்த மொத்த படங்களை விட வேலை பார்க்க ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் பார்த்திருப்பேன் என்றே தோன்றுகிறது.

எல்லா தமிழர்களை போல எனக்கும் தமிழையும் ஆங்கிலத்தையும் விட்டால் பிற மொழிகள் தெரியாது. படிக்க அதிக முயற்சிகள் எடுத்ததும் கிடையாது. இருந்தாலும் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அந்த தைரியத்திலும், கஜினி ஏற்படுத்திய எதிர்பார்ப்பினாலும், அசினின் முதல் ஹிந்தி படம் என்பதாலும், முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவெடுத்துவிட்டோம். சரி நம்ம தான் இப்படி என்றால், நம்ம மாதிரியே நம்ம ஊர் மக்கள் பலபேரை தியேட்டரில் பார்க்க முடிந்தது.

படம் எதிர்பார்த்ததை விட செம சூப்பராக இருந்தது. படத்தில் ஒவ்வொரு வசனமும், காட்சியும் தமிழ் கஜினி போல இருந்தாலும், க்ளைமேக்ஸ்ல கொஞ்சம் மாறுதல். தமிழில் கஜினி நல்ல பெயர் ஏற்படுத்தியது என்றால், ஹிந்தியில் அசினுக்கு ஒரு சூப்பர் அறிமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழுக்கு அசின் திரும்ப வருவாரா என்பது தான் சந்தேகம். அசினுக்கு அதே கதாபாத்திரம், கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. படத்தில் அதிக தாக்கம் ஏற்படுத்தியதும் அவரே தான். தனக்கு பழகி போன கல்பனா கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். அதே மாதிரியே நடித்து இருந்தாலும் நன்றாகவே இருந்தது, சலித்து போகவில்லை. அமிர் கான் மொட்டை கஜினியாக நன்றாக நடித்து இருக்கிறார். முருகதாஸ் எங்கெங்கு கதையை இன்னும் மேம்படுத்த முடியுமோ அதை சரியாக கண்டுபிடித்து அழகாக மாற்றி இருக்கிறார். அதனால் படம் பட்டையை கிளப்புகிறது. சில இடங்களில் தமிழ் கஜினியை விட சூப்பராக இருக்கிறது.

ஏற்கனவே தமிழில் பார்த்திருந்தாலும் இன்னொரு முறை பார்க்கலாம்.

பின்குறிப்பு – ஹிந்தியில் गजिनी என்று எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் , ஆனால் போஸ்டர்களில் गजनी  என்றே இருந்தது.  எனது ஹிந்தி தப்பா அல்லது போஸ்டரில் ஏதாவது காரணத்தினால் போடப்பட்டதா என தெரியவில்லை.

Add comment டிசம்பர் 25, 2008

சரோஜா

தாம் தூமை தொடர்ந்து வெளிவந்த சரோஜா படத்தையும் பார்த்தாச்சு. ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஊர்ல பார்த்த படம், ரொம்பா நாளுக்கு அப்பறம் விசில் சத்தம். படம் டாப் கிளாஸா இருந்தது. திரில்லருனு தான் பேரு ஆனா படம் முழுக்க காமெடி தான். நான்கு ஹீரோக்களின் வசனத்தில் தான், காமெடியே. படம் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக செல்கிறது. பாடல்களில் மட்டுமே ஹீரோயின்களை பார்க்க முடிகிறது. அவ்வளவு தான் அவர்களின் பங்கு. சென்னை 28 பார்த்து அதில் மயங்கிய மக்கள், எந்த நேரத்தில் எதை எதிர்பார்கின்றனர் என்று புரிந்து சரியாக காமெடி வசனங்களை அள்ளி வீசி இருக்கிறார் வெங்கட் பிரபு. பாடல்களும் யுவன் இசையில் நன்றாக இருக்கிறது. படத்தில் வில்லனை கண்டு பிடிப்பது கஷ்டம் தான். பிரேம்ஜி மற்றும் சிவாவின் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது. முடிவாக சொல்ல வேண்டும் என்றால், படம் சூப்பர், கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். காலேஜ் பசங்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக கவரும் என்றாலும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

1 comment செப்டம்பர் 16, 2008

தாம் தூம்

பல நாட்களாக எதிர்பார்த்து காத்து கிடந்த படம். ஜீவாவின் மறைவிற்கு பிறகு ஆர்வம் அதிகமாகி எப்படியும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். எப்படியோ இன்று பார்த்தும் விட்டேன். படம் பார்க்க போறதுக்கு முன்னாடி ஒருத்தன் கூட படம் நல்லா இருக்குனு சொல்லல, இருந்தாலும் ஜீவாவின் விசிறி என்பதால், போயாச்சு தியேட்டருக்கு. படம் நல்லா தான் இருந்தது. ஒலிம்பிக்ஸ்ல தான் நம்ம மக்களால ஒட முடியலன்ற ஏக்கமா என்னனு தெரியல, படத்துல ரீமேக் ரவி ஒடிட்டே இருக்கார். மொழி தெரியாத மண்ணில் ரவி ஒரு கொலை கேசில் மாட்டிட்டு அவதி படுறது தான் படம். ரவியின் நினைவுகளில் நடமாடும் நிலவாக கங்கனா ரனாவத், கிராமத்து பெண்ணாக நடிக்க முயற்சி செய்து கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்காங்க. ரஷ்யாவில் ரவிக்காக வாதாடும் மற்றும் ரவியோடு சேர்ந்து ஓடும் பெண்ணாக லக்ஷ்மி ராய் கொஞ்சம் நல்லா நடிச்சுருக்காங்க. படத்தோட + னு பார்த்தா பாட்டு, அப்பறம் கதையோட வர சஸ்பன்ஸ் தான். கதை கேட்காம படம் பாருங்க படம் நல்லா இருக்கும்.

படத்துல பிடிக்காததுனு பார்த்தா, ஹாலிவுட்ல இருந்து சுட்டு போட்டுருக்க இசையும், கதையும் தான். படம் ஆரம்பிக்கும் போதே “Bourne Identity” ட்ராக் தான் ஒடுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ்க்கு அப்படி ஒரு நம்பிக்கை போல, நம்ம மக்கள் தமிழ் படம் தவிர வேற எதுவும் பார்க்க மாட்டோம்னு. சரி படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து, “Red Corner” படம் பார்த்தால், அப்படியே தாம் தூம் பார்த்த மாதிரியே இருந்தது. அப்பறம் தான் தெரிஞ்சது, அந்த படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்று :( . ப்ரேம் பை ப்ரேமாக சுட்டு போட்டுருக்காங்க. இதை கண்டுப் பிடித்த “நம்ம வீட்டு” மக்களுக்கு பாராட்டுகள்.

ஒரே ஒரு குறை தான், படத்துல ஜீவாவோட டச் இல்லை ஆனா நல்ல தமிழ் படம். பார்க்கலாம் ஒரு முறை.

Add comment செப்டம்பர் 7, 2008

தசாவதாரம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தசாவதாரம் படம் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. சும்மா சொல்ல கூடாது கமலும் கே.ஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். படத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம், தேவையான இடங்களில் திறமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். சென்னையை சேட்டிலைட் மூலம் காட்டுவதில் தொடங்கி கடைசியில் சுனாமி வரை சூப்பராக இருக்கின்றன காட்சிகள். பத்து வேடங்களில் வந்தாலும் இரண்டு மூன்று வேடங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. படத்தை பார்த்து முடித்தவுடன் படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. பாமரனுக்கு படம் புரியுமா என்றால் புரியாது என்றே தோன்றுகிறது. எதுவும் பார்த்த உடன் புரிவது போல இல்லை. இயற்பியல் சமாச்சாரங்கள் படத்தில் புதைந்து கிடக்கின்றன. அதை யோசித்து பார்த்தால் தான் படத்தின் பிரமான்டமும், இது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது என்பது புரியும். “Chaotic theory” என்பதை வைத்து தான் படத்தின் கதை மற்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால் படத்தில் அதை பற்றி எதுவும் சொல்லவில்லை. ரசிகர்களின் கற்பனைக்கு விட்டுவிட்டனர்.

சரி புரியாததை விட்டு விடுவோம், வழக்கமானவை என்ன இருக்கிறது என்று பார்த்தால், எல்லாம் இருக்கிறது. அசர வைக்கும் சண்டை காட்சிகள், கமலின் அபார நடிப்பு, அசினின் வழக்கமான வாய் மூடாத பேச்சு என அனைத்தும் இருக்கின்றன. கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம். தமிழில் ஒரு புதுமையான படம் என்றும் சொல்லலாம்.

Add comment ஜூன் 26, 2008

சந்தோஷ் சுப்ரமணியம்

ஜெயம் ரவியின் மற்றோரு ரீமேக். படம் சூப்பராக இருந்தது. படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் கதயை சொல்லிவிடுகின்றனர். சிறு வயதில் கை பிடித்து நடக்க வைக்கும் அப்பா, 24 வயது வரை, கையை பிடித்து கொண்டே இருந்தால் என்ன நடக்கும் என்பது தான் கதை. 24 வயது பையனுக்கு எப்படி பூரி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் கொஞ்சம் அதிகம் அக்கறை காட்டும் அப்பாவாக பிரகாஷ் ராஜ் கலக்கி இருக்கிறார். வாழ்க்கையில் தான் பார்க்கும் வேலை மற்றும் மணக்கும் பெண் இரண்டு மட்டுமாவது தானே முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் ரவியை ஈர்கிறது ஜெனெலியா வாழ்க்கையை வாழும் முறை. ஜெனெலியா கவர்வது ரவியை மட்டும் அல்ல நம்மையும் தான். குழந்தை பொன்ற நடிப்பில் நன்றாக நடித்திருக்கிறார்,ஜெனெலியா. காமெடி நன்றாக அமைந்துள்ளது. பாஸ்கர் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் நடிப்பை கண்டு வெடிக்கிறது சிரிப்பு. பாட்டுகள் அருமை. மொத்தத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம், குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல படம்.

3 comments மே 3, 2008

பில்லா

“பில்லா” என்று பார்த்தால் முதல் ரீமேக், டான் என்று பார்த்தால் நான்காவது ரீமேக் ஆனால் புதிதாக தான் இருந்தது. புதிதாக வெளிவந்த டான் படம் போல் செட் எல்லாம் இருக்கிறது என்று நண்பர்கள் கூறுகின்றனர், அந்த படம் பார்க்காததால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விஷ்ணுவர்தன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார். அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலில் பார்த்ததே இல்லை. படம் முழுவதும் கருப்பு சட்டை அல்லது வெள்ளை சட்டை, கண்ணில்   ஒரு கூலிங் கிளாஸ் என சூப்பராக இருக்கிறார் அஜித். சில படங்களில் அதிகமாக பேசி எதாவது செய்வார். இந்த படத்தில் அது எதுவும் இல்லை. நடை மற்றும் உடையிலும் கலக்கி இருக்கிறார் அஜித். நமீதா எப்பவும் மாதிரி தான் ஒரு பாட்டு, கொஞ்சம் வசனம் கொஞ்சம் உடை என வலம் வருகிறார். நயன்தாராவுக்கு நமிதாவை விட கொஞ்சம் பெரிய ரோல் அவ்வளவு தான். பிரபுவுக்கு இன்ஸ்பெக்டர் வேடம், ஆனால் அவர் வந்த உடனே ரசிகர்கள் சிரிக்கின்றனர், அது ஏன் என்று தான் புரியல. படத்தின் முக்கிய அம்சம் மேட்சிங் மேட்சிங்காக இருக்கும்  பேக்கிரவுண்ட் மற்றும் அதுக்கு  ஏற்ற மாதிரி இருக்கும் ஆடைகளும் தான். அஜித் ரஜினி மாதிரி ஆட முயற்சித்தாரா இல்லையா என்று தெரியவில்லை, ஸ்டெப் போட்டு ஆடி இருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம் ரஜினி ஆடினா அசிங்கமா தெரியாது ஆனா அஜித் ஆடினா அப்படியே தெரியுது. மற்றபடி படம் சூப்பர். ஒரு புது அஜித்தை படத்தில் பார்க்கலாம்.

3 comments டிசம்பர் 16, 2007


 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்