கற்பனைக் கோட்டை
காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து. தலையில் விழுந்த குட்டு தாங்க முடியாமல் அலாரம் வாயை மூடிக் கொண்டது. தூங்கவும் முடியாமல், தூக்கத்திலிருந்து எழவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தான் அவன், கதையின் கதாநாயகன். அலாரம் உதவுவதைவிட அவனுக்கு அதிகமாக உதவுவது ஒவ்வொரு நாளும் இருக்கும் மீட்டிங் தான். அன்றும் இருந்தது 9.30க்கு.
அதிவேகமாக கிளம்பினாலும், அலுவலகம் செல்ல நேரமாகிவிடும் போல் இருந்ததால், ஆட்டோவின் உதவியை நாடினான். 2 கிலோமீட்ட்ருக்கு 50 ருபாய், கேட்டான். “என்னனே இவ்ளோ ?” என்றதற்கு, “அங்க திரும்ப சவாரி கிடைக்காது சார், சாப்ட்வேர் இஞ்சினியர் நீங்களே இப்படி சொல்லலாமா ?” என்பது தான் பதில். ஆனால் அவன் ஆட்டோவில் செல்லவில்லை. அட்டோகாரன் அதிகம் கேட்டாலும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் காரணம், காய்கறி விலை கூடினாலும் அவர்களே தான் காரணம். இவ்வளவு நாள் அரசு ஊழியர்கள் இப்பொழுதோ சாப்ட்வேர் இன்ஜினியர்கள், மக்களுக்கு குறை சொல்ல யாராவது இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எப்படியோ கம்பெனிக்கு 9.31கு சென்றுவிட்டான். 11.00 க்கு மீட்டங் சுபமாக முடிந்தது. இருந்தாலும் அவன் மேனேஜர் முகம் மட்டும் உர் என ஏன் இருந்தது என புரியவில்லை.
கையில் காபியுடன் அவுட்லுக்குள் லுக்கை செலுத்தினான். தேவையில்லாத மெயில்களுக்கு நடுவே இருந்தது, அவன் மேனேஜரின் மெயில். நேற்று அவன் செய்வதாக சொல்லி இருந்த 10 விஷயங்களில், ஒன்று முடிக்கவில்லை என்றும் அது ஏன் என்றும், இவ்வாறு வேலை செய்தால் உருப்படாது என்பது போலவும் இருந்தது மெயில். இது வழக்கம் தான், எவ்வளவு செய்தாலும் தவறுகள் மட்டுமே தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். அது எப்படி என்பது இதுவரை அவனுக்கு புரிந்ததில்லை. ஆனால் அவரின் மெயில் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கோபம் மட்டும் எரிமலை போல பொங்கி அடங்கும், வேலையின் மீது வெறுப்பு வரும், மேனேஜர் மீது கோபம் வரும். அவனால் முடிந்தது அவ்வளவு தான்.
அடுத்து வேலையில் மூழ்கினான். பிரேசில் கஸ்டமர் கேட்ட விடைகளுக்கு தெளிவாக பதில் அளித்தான். பாவம் அவர்கள் கணக்கில்லாமல் செலவழித்துவிட்டு விடைக்காக நிற்பவர்கள், அவர்களை அவன் என்றும் நிற்க வைப்பதில்லை. அடுத்து ஒரு மணிக்கு சாப்பாடு. சாப்பாடின் வாசனை மட்டுமே போதும் அவனுக்கு, அதற்கு மேல் சாப்பிட தோன்றுவதே இல்லை. ஏன் என்று அவனுக்கும் தெரிந்ததில்லை. பதார்த்தங்களின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும் தினமும், லக் இருந்தால் புழு பூச்சியை சாப்பாட்டில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும், அவ்வளவு தான். என்ன செய்வது. கம்ப்ளெய்ன்ட் செய்தால் வேறு ஒரு ஹோட்டல்காரன் வருவான், ஒரு வாரம் நன்றாக இருக்கும், அடுத்த வாரம் அதே கதை தான்.
சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். நேரம் முடிந்துக் கொண்டே இருந்தது, வேலை இருந்துக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு ஃபோன் செய்தான். பக்கத்து வீட்டு ஆண்டியும் இருந்தார்கள் வீட்டில். ஆண்டியுடன் பேச வேண்டிய சூழ்நிலை. அவர்களோடு அதிகமாக் பேச விரும்புவதில்லை, இருந்தாலும் மாட்டிக் கொண்டான் இன்று,
“என்னப்பா எப்படி போகுது வேலை ? “
“நல்லா போது, ஒன்னும் பிரச்சனை இல்ல”.
“எல்லாம் டவுனுனு கேள்விப்பட்டேன்” (பார்க்கும்போது எல்லாம் இதே கேள்வி தான்).
“ஆமாஆன்டி, எங்க டீம்ல பிரச்சனை இல்ல”
“சரிப்பா மணி கூட சொல்லிட்டே இருந்தான்,சாப்ட்வேர் அவ்வளவு தான், அப்படினு, இது நிலைக்காதுபா, தெரிஞ்சு தான் நாங்க மெக்கானிக்கல் எடுத்தோம்” (தெரிஞ்சா எடுத்தீங்க, cs இல்லைனுல எடுத்தீங்கனு சொன்னா ஒத்துக்கவா போறீங்க ?)
“சரிப்பா உடம்ப பார்த்துக்கோ”
எல்லா வேலையும் முடிச்சுட்டு வர இரவு பன்னிரெண்டு, பெர்சனல் மெயிலை புரட்டிவிட்டு சில வேலைகளை முடித்துவிட்டு படுக்க 2. காலேஜ் நினைவுகள் கண் முன் வந்து நின்றன. சாப்ட்வேர் இஞ்சினியர் பற்றி அவனுக்கு அதுவரை தெரிந்தது எல்லாம், மனசுக்கு பிடித்த வேலை, கம்பெனி முழுவதும் அழகான பொண்ணுக, கை நிறைய சம்பளம், எதையும் வாங்க முடியும் சம்பளம், அவ்வளவு தான். வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது, அப்படி இல்லை என்று. அதுவும் நம்ம தமிழ் படங்கள் “கற்றது தமிழ்”, “அறை எண் 305ல் கடவுள்” எல்லாம் பார்த்தா அவ்வளவு தான். கற்றது தமிழில் காமிச்சது போல அறைக் குறை ஆடைகலுடனும் யாரும் வருவதில்லை, “அறை எண்” படத்தில் காட்டியது போல சும்மா சம்பளம் கொடுப்பதில்லை. ஏன் இவ்வளவு கேவலமாக படங்களில் காட்ட வேண்டும் என்று நினைத்த போது கோபம் வந்தது. கஷ்டப்பட்டு மானத்தோடு உழைத்து வாழ்வதை இப்படி சித்தரிக்கிறார்களே என்று நினைக்கும் போது கோபம் உச்சியைத் தொட்டது. அதுவும் இதை சொல்வது யார் என்றால், பெண்களை அறைக் குறை ஆடைகளுடன் ஆடவைத்து காதலை வத்து காமெடி பண்ணி காசு சம்பாதிக்கும் கோஷ்டி. “என்ன கொடுமை சரவணன் இது” என நினைத்துக் கொண்டான். அவன் காலேஜில் கட்டி வைத்திருந்த கற்பனை கோட்டை மெதுமெதுவாக தகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மக்க்ளின் கற்பனையோ எல்லை இல்லாமல் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு நினைத்துக் கொண்டே தூங்கி போனான். காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து.
1 comment ஜூன் 17, 2009
விருப்பமில்லாத இடைவெளி
ஒரு மாதத்திற்கு மேலே ஆகிவிட்டது, இந்த வலைபதிவில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் பதிவு செய்து. அதுக்காக ஏதோ பெருசா இருக்குனு நினைக்காதீங்க. வழக்கம் போல மொக்கை தான். சரி இரண்டு மாசமா என்ன நடந்சுச்சுனு யோசிச்சுப் பார்த்தேன். இரண்டு படம், இரண்டு டூரு, இரண்டு குட்டி கதையும் கவிதையும் மனசுல தோன்றி, சோம்பேறி தனத்தால பதிவு செய்யாம, சின்ன மூலைக்குள்ள் ஒரு ஓரத்துல இருக்கு, அத மெதுவா தூசித் தட்டி, பெயர் வைச்சு, பதிவு செய்யனும். அத கூடிய சீக்கிரத்துல செய்வேன் அப்படினு சொல்றதுக்கு தான் இப்ப இந்த பதிவு. ஒகே ஒகே கூல் டவுன்.
சரி நான் போன சுற்றுலாக்கள் மற்றும் படங்கள் பற்றிய தகவல்கள் ஆங்கில வலைபதிவுல இருக்கு. தமிழ்ல அடிக்க நேரம் கிடைக்கல. இனிமேலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி தமிழ் வலைப்பதிவுல ஏதாவது அடிக்கனும். பார்ப்போம் நம்ம நினைக்குறது ஏதாவது நடக்குதானு.
2 comments ஜூன் 4, 2009
வெண்ணிலா கபடி குழு
சொல்ல்வா வேண்டாமா ? ஏற்கனவே பல பேர் சொல்லிருப்பாங்க நாமும் சொல்லனுமா ? தேவையா ? இப்படி எல்லாம் யோசிச்சேன். சரி கடைசியா ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு படம் பார்க்குறோம் எதுக்கு அத பத்தி சொல்லாம இருக்கனும் நினைச்சு சொல்றேன். சில காலமாகவே படம் எதுவும் பார்க்கவில்லை. அபியும் நானும், பூ என ஏகப்பட்ட படங்கள் விட்டு போனதில் வருத்தம். ஹோலிக்காக மார்ச் 11, புதன்கிழமை கம்பெனி லீவ், அதுவும் எங்க கம்பெனி மட்டும் லீவு. சரி வெண்ணிலா கபடி குழு படத்துக்கு போவோம் என முடிவு செய்தோம். புதன்கிழமை தியேட்டரில் எங்களையும் ஒரு பத்து ஜோடிகளையும் தவிர கூட்டம் இல்லை. படம் பார்க்க சென்றவர்கள் நாங்கள் மூவர் மட்டும் என்று தான் நினைக்கிறேன். படத்தில் பெயர் போடும் போது பார்த்தால், அறிமுகம் என்றே ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தனர். ஆனால் படம் நன்றாக தான் இருந்தது, ரொம்ப நல்லாவே இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் படம் குதூகலமாக சென்றது. படம்போன வேகமே தெரியவில்லை. வசனங்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் நடிப்பு நன்றாக தான் இருந்தது. சரண்யா மோகன் மிக குறைந்த நேரமே வந்தாலும் நினைவில் நிற்கிறார். சென்னை 28 மாதிரியே கதை இருக்கிறதோ என்று ஒரு டவுட் வருகிறது. கடைசியில் படத்தில் ஒரு ட்விஸ்ட். அங்க கொண்டு போய் எதுக்கு அந்த டுவிஸ்டுனு இயக்குனருக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் படம் சூப்பர், பார்க்கலேனா பாருங்க.
2 comments மார்ச் 24, 2009
நான் கடவுள் – விமர்சனம்
காலை ஆறு மணிக்கு நான்கு அலாரங்கள் அடிக்க, அவசர அவசரமாக கிளம்பி காலையில் வயிற்றுக்கு எதுவும் உண்ணக் கொடுக்காமல், ஓடி சென்று தியேட்டரில் உட்கார்ந்தோம். அன்று பரீட்சைக்கு காட்டும் அக்கறையை விட இன்று படத்துக்குக் காட்டும் அக்கறைத்தான் அ திகம். படத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள். சில இடங்களில் கொஞ்சம் கொடுரமாக இருக்கும் என்று தான் எண்ணினோம். ஆனால் படம் முழுதுமே அப்படி தான் இருந்தது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியதே கதை. அகோரி சாமி வேடத்தில் வரும் ஆர்யா வருவது சில நேரம் தான். மற்ற நேரங்களில் பூஜாவும் அவளோடு வில்லன்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் மக்களும் தான் வருகின்றனர். அவ்ர்கள் நடிப்பும் புகழும்படியாகவே இருந்தது. பூஜா மற்றும் அவர்களது நடிப்பை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும். பூஜாவுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஆர்யா வருவதோ சில காட்சிகள் தான் என இருக்க அவர் எதற்கு மூன்று ஆண்டுகள் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர். பாலா மிக மிக தத்ரூபமாக எடுக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டதாக தோன்றுகிறது. சில இடங்களில் நம்மை நெகிழ வைப்பதற்கு பதிலாக் நெளிய வைக்கிறது. கடைசி காட்சியில் பூஜாவின் நடிப்பு அபாரம், ஆர்யாவின் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது, பாலாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆனால் படத்தில் ஒரு முழுமை இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் எனக்கு படம் பிடிக்கவில்லை.
2 comments பெப்ரவரி 10, 2009
வருங்கால போலீஸ்
சென்ற வாரம் RTO ஆபீசுக்கு சென்றிருந்தேன். தேர்வை முடித்துவிட்டு புகைப்படம் எடுப்பதற்காக காத்திருந்த போது ஒருவரை சந்தித்தேன். அவருக்கும் பேசுவதற்கு யாரும் இல்லை, நானும் தனியே இருந்ததனால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேற வழி ? விசாரித்ததில் இப்பொழுது லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதும், அதனால் லைசன்ஸ எடுப்பதற்காக வந்திருப்பதாகவும் தெரியவந்தது. மேலும் தன்னை பற்றி சொல்லத் தொடங்கினார். போலிசில் சேருவதற்கு முயற்சித்து வருவதாக கூறினார். ச்ச பரவாயில்லியே என்று பேச்சைத் தொடர்ந்தேன். “சரி வேலைக்கு சேருவதற்கு பணம் கேட்பாங்கலே” என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் நன்றாக இருந்தது.
“ஆமா கேட்பாங்க. அனால் வேலைக்கு சேர்ந்த உடனே சம்பாதிச்சுரலாம்ல. இரண்டு மாசத்துல எல்லாத்தையும் முடிச்சுரலாம். அப்பறம் என்ன பிரச்சனை. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் போலீஸ்ல இருக்காரு. அவர் எங்க போனாலும் காசே கொடுக்கமாட்டாரு. நான் இந்த ஊர் போலீஸ் அப்படி இப்படினு முடிச்சுருவாரு. கடைக்காரனும் ஒன்னும் கேட்கமாட்டான், நம்மகிட்ட தான் துள்ளுவான்” என கூறி முடித்தார். என்ன சொல்வது என தெரியவில்லை சும்மா ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.
1 comment ஜனவரி 31, 2009
பூனாவில் பொங்கல்
ஒரு வாரம் லீவ் என்பதாலும், அக்காவின் குழந்தையைப் பார்க்க இதைவிட்டால் வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதாலும், இந்த வருடம் பொங்கலை பூனேவில் கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து கொண்டாடியும் முடித்தாகிவிட்டது. 14 மணி நேர பயணம் இனிதாக இருந்தது, பயணத்தின் போது ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது. K.S.R.T.C யில் கன்னட படங்களை தவிர வேறு மொழி படங்கள் போடக் கூடாது என்பது தமிழ்நாட்டிற்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான். ஏனென்றால் நான் வந்த பேருந்தில் ஹிந்தி படமும் பாட்டும் தான் ஓடியது. சரி ஹிந்தி தான் கொஞ்சம் கொஞ்சம் பார்க்கலாம் என நினைத்தால், போன வாரம் பார்த்த அதே கஜினி. சரி என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கும் போது தான் அவளை கண்டேன். இரவு முழுவதும் அவளுடன் பேசுவதிலியே பொழுது சென்றது. நான் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
சரி நம்ம பொங்கலுக்கு வருவோம். பொங்கல் சூப்பராக சென்றது. பூனாவில் நம்ம ஊர் ஐட்டங்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தாலும் அலைந்து திரிந்து வாங்கி பொங்கலை கொண்டாடினோம். அப்பறம் வழக்கம்போல டிவியில் போட்ட படங்கள், நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே பொழுது போனது. நிகழ்ச்சிகளில் கவனத்தில் நின்றது இரண்டு விசயங்கள், ஒன்று நடிகர் சிவகுமார் தன் புத்தகத்தை பற்றி பேசியது, மற்றொன்று சாலமான் பாப்பையா பட்டி மன்றம். சிவகுமார் காதலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் கூரியவற்றின் கருத்து என் மொழியில் பின் வருமாறு, “எல்லார்க்கும் டீனேஜ்ல ஒரு சுடர் உருவாகுது, அத ஒழுங்கா பயன்படுத்தினா இன்ஸ்டெய்ன் ஆகலாம் வாழ்க்கையில் நிறையா சாதிக்கலாம். ஆனால் டீனேஜில் வரும் காதலில் மாட்டிக் கொண்டால் எரிந்தும் போகலாம். டீனேஜில் வரும் காதல் ஆற்றில் உள்ள முதலையை போன்றது, யானையைக் கூட நீரில் இழுத்துக் கொன்றுவிடும். காதல் என்பது ஒன்றும் இல்லை இனவிருத்திக்கான ஒரு முதல் படி. ஆகவே இளைஞர்களே டீனேஜில் காதல் செய்யாதீர்கள், முதலில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள், பின்பு காதலை பற்றி சிந்தியுங்கள்”. சாலமான் பாப்பையாவின் பட்டி மன்றமும் கிட்டத்தட்ட இது போன்றே இருந்தது. என் கருத்தும் இந்த விசயத்தில் இதே போன்று இருந்ததனால் என்னை கவர்ந்தது. வேறு நிகழ்ச்சிகளை பற்றி பெரிதாக சொல்வதற்கு இல்லை. வழக்கம் போல தமிழ் தெரியாத நடிக நடிகைகள் தங்களுக்கு தெரிந்த தமிழிலும், தமிழ் தெரிந்த நடிகைகள் தமிழ் தெரியாதது போலவும் பேசி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.ஜனவரி 14ஐ தமிழ் வருடப்பிறப்பு என கலைஞர் அறிவித்து இருந்தாலும், யாரும் அதைக் கொண்டாடியது போல் தெரியவில்லை, நானும் தான்.
பின்குறிப்பு: சரி பேருந்தில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன் என்றேனே, யார் என்ற சந்தேகம் இன்னும் இருந்தால், கீழே வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள், அது வேறு யாரும் இல்லை நிலா தான்.
Add comment ஜனவரி 15, 2009
கஜினி – गजनी
காலையில் 6.45 இரண்டு அலாரம் வைத்து எழுந்து, கிளம்பி பஸ் பிடிச்சு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் அண்ணனை எழுப்பிவிட்டுட்டு, பத்து மணிக்கு தியேட்டர் வாசலில் சென்று நின்றோம் நானும் முசியும். எங்களுக்கே கொஞ்சம் சிரிப்பாக தான் இருந்தது, புரியாத மொழி படத்தை பார்பதற்கு என்ன ஆர்வம் என்று எண்ணி சிரித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களுக்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்பொழுது எப்படி இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். நான் 22 வருடமாக தியேட்டருக்கு சென்று பார்த்த மொத்த படங்களை விட வேலை பார்க்க ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் பார்த்திருப்பேன் என்றே தோன்றுகிறது.
எல்லா தமிழர்களை போல எனக்கும் தமிழையும் ஆங்கிலத்தையும் விட்டால் பிற மொழிகள் தெரியாது. படிக்க அதிக முயற்சிகள் எடுத்ததும் கிடையாது. இருந்தாலும் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அந்த தைரியத்திலும், கஜினி ஏற்படுத்திய எதிர்பார்ப்பினாலும், அசினின் முதல் ஹிந்தி படம் என்பதாலும், முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவெடுத்துவிட்டோம். சரி நம்ம தான் இப்படி என்றால், நம்ம மாதிரியே நம்ம ஊர் மக்கள் பலபேரை தியேட்டரில் பார்க்க முடிந்தது.
படம் எதிர்பார்த்ததை விட செம சூப்பராக இருந்தது. படத்தில் ஒவ்வொரு வசனமும், காட்சியும் தமிழ் கஜினி போல இருந்தாலும், க்ளைமேக்ஸ்ல கொஞ்சம் மாறுதல். தமிழில் கஜினி நல்ல பெயர் ஏற்படுத்தியது என்றால், ஹிந்தியில் அசினுக்கு ஒரு சூப்பர் அறிமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழுக்கு அசின் திரும்ப வருவாரா என்பது தான் சந்தேகம். அசினுக்கு அதே கதாபாத்திரம், கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. படத்தில் அதிக தாக்கம் ஏற்படுத்தியதும் அவரே தான். தனக்கு பழகி போன கல்பனா கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். அதே மாதிரியே நடித்து இருந்தாலும் நன்றாகவே இருந்தது, சலித்து போகவில்லை. அமிர் கான் மொட்டை கஜினியாக நன்றாக நடித்து இருக்கிறார். முருகதாஸ் எங்கெங்கு கதையை இன்னும் மேம்படுத்த முடியுமோ அதை சரியாக கண்டுபிடித்து அழகாக மாற்றி இருக்கிறார். அதனால் படம் பட்டையை கிளப்புகிறது. சில இடங்களில் தமிழ் கஜினியை விட சூப்பராக இருக்கிறது.
ஏற்கனவே தமிழில் பார்த்திருந்தாலும் இன்னொரு முறை பார்க்கலாம்.
பின்குறிப்பு – ஹிந்தியில் गजिनी என்று எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் , ஆனால் போஸ்டர்களில் गजनी என்றே இருந்தது. எனது ஹிந்தி தப்பா அல்லது போஸ்டரில் ஏதாவது காரணத்தினால் போடப்பட்டதா என தெரியவில்லை.
Add comment December 25, 2008
குட்டையனின் குட்டி கதை
அரை மணி நேர பிராயணம் முடிந்து குட்டையனின் வாசலில் வந்து நின்றது என்னுடைய ஸ்கூட்டி. நம்ம செந்தில் இறங்கியவுடன் அவ்வள்வு நேரம் அமுங்கி இருந்த பின் டயர் உடனே எழுந்தது. அதனால் வந்த ஆட்டத்தை சமாளித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினேன். வீட்டுக்குள் இருந்து குட்டையன் ஒட்டகத்திடம் ஏதோ கத்தி கொண்டு இருந்தான். ஒட்டகமோ அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், குட்டையன் அம்மா வைத்த பலகாரங்களை வாயில் போட்டு அரைத்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் எட்டி பார்த்தோம், யாரை பார்த்தாலும் குரைத்து அட்டகாசம் செய்யும் டைசனோ தன் வேலையை தன் எஜமானர் எடுத்து கொண்டதால் அமைதியக இருப்பது போல படுத்துக் கிடந்தது. கட்டி போடபட்டிருக்கும் டைசனை சமாளிப்பதில் பிரச்சனையே இல்லை, உள்ளே இருக்கும் குட்டையன் தான் பிரச்சனை. “என்னடா இப்படி கத்திட்டு இருக்கான், கெட்ட வார்த்தைலாம் போட்டு திட்டிட்டு இருக்கான் ? நம்மலதானா ?” என நல்ல பிள்ளை போல் கேட்டான் செந்தில். “நாம நேத்து செஞ்சதுக்கு கொஞ்சவா செய்வான் ?” என்றேன். நினைவுகளில் 24 மணிநேரம் பின் நோக்கி பயனித்தோம்.
காலை 9.30 மணி, பள்ளியில் உணவு இடைவேளை. நான், செந்தில் மற்றும் ஒட்டகம் சாப்பிட்டு முடித்துவிட்டு உட்கார்ந்து இருந்தோம். குட்டையனோ, மின்னலை பின் தொடர்ந்து சென்றுவிட்டான். “மின்னல்” வேற யாருமில்லை, அவன் காதிலிப்பதாக சொல்லி கொண்ட பெண் தான். குட்டையனுக்குள் காதலா என்று நாங்கள் வியந்ததுண்டு, பிறகு தான் தெரிந்தது எங்கே நண்பர்கள் ஏதாவது அட்டு ஃபிகரோடு வைத்து ஓட்டிவிடுவர் என்று எண்ணி குட்டையன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று. ஆனால் நாங்களோ அவனையும் மின்னலையும் சேர்த்து வைத்து பேசுவதே இல்லை, மின்னல் அழகு இல்லை என்றாலும் பார்க்கும்படி இருப்பதால் அவனோடு சேர்த்து பேச மனம் இடம் கொடுப்பதில்லை. இருந்தாலும் நாங்கள் பேச வேண்டும் என்பதற்காகவே குட்டையன் ஏதாவது முயற்சி செய்துக் கொண்டே இருப்பான். அந்த முயற்சியில் ஏதாவது ஒன்றாக தான் இதுவும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டோம்.
இந்த இடத்தில் செந்திலை பற்றி சிறிது சொல்ல வேண்டும், செந்தில் ஒரு நல்ல ஓவியன். எப்பொழுதும் ஏதாவது வரைந்து கொண்டும், எதிலாவது கிறுக்கி கொண்டும் இருப்பான். அன்று அவன் கையில் சிக்கியது குட்டையனின் ஐடி கார்டு தான். சிறுது நேரத்தில் அதில் அழகான ஓவியம் ஒன்று உருவாக்கிவிட்டான். ஐடி கார்டில் இருந்த குட்டையனின் முகத்தில் உதடு மற்றும் கண்ணை தவிற மற்ற அனைத்து இடத்திலும் கருப்பு கலர் அடித்துவிட்டான். ஏன் என்று தெரியவில்லை அது குட்டையன் முகத்தை அகோரமாக்கி இருந்தது ( முதலில் அழகாக இருந்ததானு கேட்காதீங்க
). இதோடு நிறுத்தி இருந்தால், குட்டையனும் கூட சேர்ந்து சிரித்திருந்துப்பான். இதோடு நில்லாமல் அவன் ஐடி கார்டு க்ளாஸ் முழுவதும் சுற்றி வர ஆரம்பித்தது. இதை எல்லாம் செய்து முடித்துவிட்டு மெதுவாக மைதானத்துக்கு சென்றுவிட்டோம். மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் தூசி மண்டலம் ஒன்று உருவாகுவது போல தெரிந்தது. ஆகா குட்டையன் தான் ஆக்ரோஷத்தில் ஒடி வந்து கொண்டிருந்தான். வந்து செந்திலை அடிக்க பாய்ந்தான், அந்தோ பரிதாபம் PT வாத்தியாரிடம் மாட்டிக் கொண்டான். அவர் வைத்த குட்டில் அவன் மண்டை வீங்கியது தான் மிச்சம். எப்படியோ அன்று அவனிடம் இருந்து தப்பி வீட்டுக்கு சென்றோம். பஸ்சில் போகும் பொழுது ஏதோ ஒரு கிராதகன் ஐடி கார்டு பெண்கள் பக்கம் சென்ற விசயத்தை குட்டையனிடம் சொல்லி இருக்ககிறான்.அதனால் தான் இன்னும் குட்டையனின் கோபத்திற்கு காரணம்.
ப்ளாஷ்பேக் முடிந்தது. இன்னும் வீட்டுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருந்தோம். வாரம் வாரம் குட்டையன் வீட்டுக்கு சென்று சேர்ந்து படிப்பது வழக்கம். சரி நம்ப மாட்டீங்க, குட்டையன் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். குட்டையன் படு ஹாட்டாக் இருந்தான். உள்ளே நுழைந்தவுடன் தவ்வி விட்டான் ஒரு குத்து செந்திலின் நெஞ்சில். என்னதான் பையன் குட்டை என்றாலும் வானில் இரண்டடி தவ்வி அடிப்பதில் கெட்டிகாரன். அடுத்து கேள்வி கனைகளை தொடுக்க ஆரம்பித்தான். “ஏன்டா அப்படி பண்ணீங்க ?, ஏன்டா பாஸ் பண்ணிவிட்டீங்க ?, சரி ஏன்டா பொண்ணுக பக்கம் கொடுத்தீங்க ? , என் இமேஜே போச்சு டா”, என அடுக்கிக் கொண்டே போனான் குட்டையன். இதுவரை நொறுக்கு தீனிகளை அரைத்து கொண்டிருந்த ஒட்டகம் எழுந்தான். “ஏன்டா குட்டையா, இல்லாத இமேஜுக்கு ஏன்டா இவ்வளவு பில்டப்பு” என்றான். குட்டையனுக்கு கொஞ்சம் அவமானமாகி போனாலும் மறுக்க முடியாத உண்மை என்பதால், அமைதியாக இருந்தான். “இல்லடா பொண்ணுக எல்லாம் பார்த்து சிரிச்சாங்கடா” என்றான் குட்டையன் பாவமாக. எனக்கும் செந்திலுக்கும் மனம் லைட்டாக வருத்தபட்டது. எதற்காக ? குட்டையனுக்காகவா ? ச்ச ச்ச இல்லவே இல்லை. அந்த காட்சியை நாம் காணமுடியவில்லையே என்ற வருத்தம் தான். ஆனால் ஒட்டகமோ அசரவில்லை, “இது என்ன புதுசா ? இதுக்கு முன்னாடி உன்னை பார்த்து சிரிச்சதில்லையா ? புதுசா அசிங்க படுற மாதிரி ஏன்டா பிட்ட போடுற ? போ போய் உட்காரு, வா டிவி பார்க்கலாம்” என்று முடித்தவுடன் குட்டையனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகு பொழுது மதியம் நல்ல சாப்பாடு, டிவி என முடிந்தது.
சரி இவ்வளவு சொல்லிட்டு கதையின் நீதி சொல்லவில்லை என்றால் எப்படி, “இல்லாத இமேஜை காப்பாற்ற கஷ்ட படாதீங்க”. சரி இது உங்களுக்கு பொருந்துமானு கேட்காதீங்க, பதில் சொல்ல மாட்டேன்.
2 comments நவம்பர் 14, 2008
வல்வில் ஓரி
வல்வில் ஓரி கொல்லிமலையில் ஆட்சி புரிந்த சோழர் காலத்து குறுநில மன்னர்களில் ஒருவன். பொன்னியின் செல்வனில் கல்கி வல்வில் ஓரியை பற்றியும், அவரது வில் வித்தையின் மேன்மை பற்றியும் விளக்கி இருக்கிறார். ஓரி ஒரே அம்பினால் யானை, புலி, மான், பன்றி மற்றும் உடும்பு ஆகியனவை வீழ்த்தும் திறமை படைத்தவன் என்று கூறுகிறது வரலாறு. பிறகு மலையமானுடனும் நடந்த யுத்தத்தில் வீர மரனம் அடைகிறான். பொன்னியின் செல்வன் கதையில், மலையமானுடைய சரித்திரத்தை பற்றி சொல்லும் போது, வல்வில் ஓரி பற்றிய வரலாற்றுக் குறிப்பும் வருகிறது. கொல்லிமலை சென்ற போது, பராமரிப்பு இல்லாமல் கிடந்த வல்வில் ஓரிக்கு அரசால் நிறுவப்பட்ட சிலையை என் கேமராவுக்குல் அடைத்து கொண்டுவந்தேன். இதோ உங்கள் பார்வைக்கு,
1 comment நவம்பர் 12, 2008
திக் திக் திக்
தெரியாமல் இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற எண்ணம் அப்பொழுது தான் செந்திலாகிய எனக்கும் செந்திலுக்கும் வந்தது. அப்படி ஒரு கும்மென்ற இருட்டை நாங்கள் பார்த்ததில்லை. நம்ம கண்ணுக்கு ஏற்கனவே நல்ல பவரு, இதுல இந்த இருட்டு வேற, விளங்கின மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வெளியே செல்லும் வழி தெரியவில்லை, ஆனால் என்னிடம் இருந்த தைரியமோ எப்படியோ வழியைக் கண்டுபிடித்து ஸ்டாப் கியர் போட்டு பறந்துவிட்டது. “மாப்பு வைச்சுடான்டா ஆப்பு” என்ற டயாலாக்குடன் நடக்க ஆரம்பித்தோம். இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்போம் அருகில் யாரோ அலருவது போன்று தோன்றியது, உரைந்து போய் நின்றோம். நடக்கவே ஆரம்பிக்கவில்லை, நகர மறுத்தன கால்கள். சரி நம்ம தான் பயப்படுகிறோம் நம்ம கூட வந்த பையன் தைரியசாலி என்று நினைத்தால் அப்பொழுது தான் தெரிந்தது ஆள் சைஸ் தான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டைதான் என்று புரிந்தது. இரண்டு அடி எடுத்து வைத்தோம், ஏதோ ஒரு துணி முகத்தில் பட்டது போன்ற தோன்றவே போட்டோம் ஒரு சடன் ப்ரேக். வியர்த்து ஊத்த ஆரம்பித்துவிட்டது. “என்ன கொடுமை சார் இது” வந்த வழியாகவும் செல்ல முடியவில்லை, முன்னேறி செல்லவும் முடியவில்லை, அந்த இடத்திலே நிற்கவும் முடியவில்லை. என்ன செய்வது ? தலைநகரம் வடிவேலின் கால்கள் போல நடுங்கி கொண்டிருந்தன செந்திலின் கால்கள், என்னோடது இல்லீங்க அருகில் இருந்த நண்பன் செந்திலின் நிலமை இது. சரி நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்கனு கேட்கலாம், இந்த கேள்விக்கு பதில் வந்து “பாஸ்”. சரி “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா” என்று எங்களை நாங்களே தேற்றி கொண்டு மேலும் நடந்தோம். “டேய் என்னடா அங்க இருக்கது”னு கேட்டான் செந்தில். “டேய் ஏன்டா உங்க தாத்தா சட்டை இல்லாம ஆடுர மாதிரி இருக்கு” என்றேன். “ஒழுங்கா பாருடா” என்றான் செந்தில். “டேய் அது தான் எழும்புக்கூடா டா” என்று கேட்டுக்கொண்டே அவனை பார்த்தேன், பார்த்தால் பையன காணோம். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தான். இவனல்லவோ நண்பன் என்று மெச்சிக் கொண்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். சரி சரி ஓகே, ஓட ஆரம்பித்தேன். கடைசியில் ஒரு சிறிய ஓட்டை வழியாக லைட் வருவது தெரிந்தது. அடித்து பிடித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே வந்து நின்றோம். அட்ஜஸ்ட் பண்ணிவிட்டு வீரட்கள் போல போஸ் கொடுக்க எண்னிணோம், ஆனால் பார்த்து சிரிப்பதற்கு ரெடியாக இருந்தனர் இருபது பேர்.
எங்கிருந்து வராங்கனு தெரியல, இதுக்கு மட்டும் கரெக்டா வந்துராங்க என்று நொந்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகன்றோம்.
இன்று செந்திலோடு தொலைபேசியில் பெசிய பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு “ஸ்கேரி ஹவுசில்” நடந்தவை கண் முன்னே வந்து விட்டு சென்றன, அது தான் நீங்கள் மேலே படித்தது. இன்றைய தீர்மானம், ஓசியா கூப்பிட்டா கூட இனி அந்த பக்கம் தலை வைச்சு படுக்க மாட்டோம்.
Add comment நவம்பர் 12, 2008
